தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.60 லட்சம் பறிப்பு:'சதுரங்கவேட்டை' திரைப்பட பாணியில் மோசடி திட்டத்தை அரங்கேற்றிய கும்பல்:விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
தனியார் நிறுவன அதிகாரியிடம் கத்தி முனையில் ரூ.60 லட்சம் பறித்த சம்பவத்தை, மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் ‘சதுரங்கவேட்டை' திரைப்பட பாணியில் அரங்கேற்றியுள்ளனர்.
ரூ.60 லட்சம் பறிப்பு
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா மூர்த்தியம்மாள்புரம் அருகே பணையாக்கோட்டையை சேர்ந்தவர் வெள்ளையப்பன் (வயது 42). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வருகிறார். அவரை தொடர்பு கொண்ட சிலர், ரூ.80 லட்சத்துக்கு 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால், ரூ.1 கோடிக்கு 2000 ரூபாய் நோட்டுகளை தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினர்.
அதை நம்பிய வெள்ளையப்பன், தனது நிறுவன உரிமையாளர் முருகராஜ் மற்றும் சிலரிடம் இதுகுறித்து தெரிவித்து ரூ.60 லட்சத்துக்கு 500 ரூபாய் நோட்டுகளை திரட்டினார். அதற்கு ரூ.75 லட்சம் 2000 ரூபாய் நோட்டுகளாக தருவதாக அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அந்த தொகையுடன் தேனிக்கு வெள்ளையப்பன், முருகராஜ் வந்தனர். அவர்களை ஒருகும்பலை சேர்ந்தவர்கள் தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகில் அழைத்துச் சென்று, கத்தி முனையில் ரூ.60 லட்சத்தை பறித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றனர்.
சதுரங்கவேட்டை
இதுகுறித்து வெள்ளையப்பன் கொடுத்த புகாரின் பேரில் கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் வீரபாண்டியை சேர்ந்த யுவராஜா, கார்த்திக்ராஜா ஆகிய 2 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மோசடி செய்த பணத்தில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் சொத்து வாங்கியது தெரியவந்தது. அந்த சொத்து ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன
இந்த மோசடியில் தொடர்புடைய கும்பலை சேர்ந்த சண்முகம் உள்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த மோசடி செய்வதற்கான திட்டத்தை 'சதுரங்கவேட்டை' திரைப்பட பாணியில் அரங்கேற்றியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அரசியல் பிரமுகர்
இதுதொடர்பாக போலீஸ் விசாரணையில், வெள்ளையப்பனை அதே ஊரைச் சேர்ந்த நபர் மூலம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் பழக்கத்தை ஏற்படுத்தினர். ஆடம்ப காரில் டிப்டாப் உடை அணிந்து அரசியல் வாதிகளுடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது போல் தகவல்களை பரப்பினர். பின்னர் ஒரு அரசியல் பிரமுகரின் பெயரை கூறி, அவரிடம் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக இருக்கும் கருப்பு பணத்தை, கமிஷன் அடிப்படையில் 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுப்பதாக கூறி நம்ப வைத்தனர்.
அதை நம்பி வெள்ளையப்பன் தரப்பினர் பணத்துடன் வந்து மோசடி நபர்கள் விரித்த வலையில் சிக்கிக் கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள இந்த கும்பலை சேர்ந்த மற்றவர்களையும் பிடித்து விசாரணை நடத்தினால் தான் இதுபோன்று வேறு யாரிடமும் பணம் மோசடி செய்து இருக்கிறார்களா? இதன் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்ற விவரம் தெரியவரும்.