மணல் குவாரி ஊழியரிடம் ரூ.9 லட்சம் பறிப்பு
மணல் குவாரி ஊழியரிடம் ரூ.9 லட்சம் பறிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள காரைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவர் திருச்சி மாவட்டம், கல்லணை அருகே கிளிக்கூடு கிராமத்தில் செயல்பட்டு வரும் மணல் குவாரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் குவாரியில் மணல் விற்பனை மூலம் கிடைத்த ரூ.9 லட்சத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
மேலவெட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், மணிகண்டன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதுவதைபோல் வந்து அவரது கவனத்தை திசை திருப்பியுள்ளார். அதே நேரத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மணிகண்டன் முகத்தில் மிளகாய் பொடியை தூவிவிட்டு, அவர் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.9 லட்சத்தை பறித்துக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில், அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், 3 மர்ம நபர்கள் திட்டமிட்டு மணிகண்டனை திசை திருப்பி அவரிடம் பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.