மேகதாது அணை விவகாரத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டும்: அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


மேகதாது அணை விவகாரத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டும்: அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x

தமிழ்நாடு பாலைவனமாவதை தடுக்க மேகதாது அணை விவகாரத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டும் அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரிப்பாசன மாவட்டங்களில் கருகும் நிலையில் உள்ள குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற முடியாமலேயே போய்விடுமோ? என்ற வேதனையில் உழன்று கொண்டிருந்த விவசாயிகளின் கண்ணீரை, பருவமழையைக்கொண்டு துடைத்திருக்கிறாள் இயற்கை அன்னை. காவிரி நீர்ப்பிடிப்புப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை தீவிரம் அடைந்திருப்பதை தொடர்ந்து கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளுக்கும் வரும் தண்ணீரின் அளவு அதிகரித்திருக்கிறது. அதனால், வேறுவழியின்றி தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீரை திறந்துவிட்டே ஆகவேண்டும் என்ற நிலைக்கு கர்நாடக அரசு தள்ளப்பட்டிருக்கிறது. இது மிகுந்த நிம்மதியளிக்கிறது.

காவிரிப்படுகையில் நிலவும் சூழலும், இந்த சிக்கலில் கர்நாடகமும், நடுவண் அரசும் நடந்துகொண்ட விதமும் ஒரு உண்மையை உறுதி செய்திருக்கின்றன. கர்நாடக அணைகளுக்கு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் கூடுதலாக தண்ணீர் வந்தாலும், கபினியில் வழிந்த மிகை நீரைத்தவிர, மற்ற அணைகளுக்கு வந்த தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட கர்நாடக அரசு முன்வரவில்லை. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை என்பதுதான் அந்த உண்மை.

மேகதாது அணை கட்டப்பட்டால், மொத்த கொள்ளளவு 181 டி.எம்.சியை கடந்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் கர்நாடகம் தண்ணீரை திறந்துவிடுவது எல்லாம் அதிசயம்தான். அது எப்போதோ ஒருமுறைதான் நடக்கும். அதனால், மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாவதை தடுக்கமுடியாது. அதனால், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story