வட்டக்கானலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு


வட்டக்கானலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 9 Oct 2023 11:45 PM GMT (Updated: 9 Oct 2023 11:45 PM GMT)

வட்டக்கானல் பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல்

'மலைகளின் இளவரசி' என்றழைக்கப்படும் கொடைக்கானலில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் வட்டக்கானல் பகுதி அமைந்துள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வட்டக்கானல் பகுதிக்கு இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அப்போது இங்குள்ள பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி மற்றும் பசுமை போர்த்திய மலைத்தொடர்களின் இடையில் தவழ்ந்து செல்லும் மேகக்கூட்டங்களை பார்த்து ரசித்து உற்சாகமடைவார்கள்.

மேலும் இங்குள்ள தங்கும் விடுதிகளில் கட்டணம் குறைவு என்பதாலும், இயற்கை எழில் மிகுந்த பகுதிகள் நிறைந்து இருப்பதாலும் இஸ்ரேல் நாட்டினர் தங்களின் விடுமுறை காலத்தை கொடைக்கானலை அடுத்த வட்டக்கானலில் கழிக்கவே பெரிதும் விரும்புகின்றனர். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு கொடைக்கானல் போலீசாரிடம் பிடிபட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் வட்டக்கானலுக்கு வரும் இஸ்ரேல் நாட்டினரை தாக்க திட்டமிட்டது தெரியவந்தது.

அதன் பிறகு வட்டக்கானல் பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுஒருபுறம் இருக்க, தற்போது இஸ்ரேல் நாட்டில் போர் நடந்து வருகிறது. இந்த நேரத்தில் அந்த நாட்டில் இருந்து கொடைக்கானலுக்கு யாராவது வந்தால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் வட்டக்கானல் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு வாகனங்களில் வருபவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே வட்டக்கானலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.


Next Story