தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும்
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் போதாது என்பதால், கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
தீபாவளியும், பட்டாசும்
இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி. தீபாவளி பண்டிகை என்றாலே படபடவென வெடிக்கும் பட்டாசுகள் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பட்டாசும், தீபாவளியும் இணைந்து பிரிக்க முடியாததாகி விட்டது. காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு, புத்தாடைகள் அணிந்ததும் பட்டாசுகளை வெடித்தால் தான் பலருக்கு நிறைவை தரும்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது பாகுபாடு இல்லாமல் பட்டாசு வெடிக்கின்றனர். பூந்தொட்டி, சங்கு சக்கரம், மத்தாப்பு கொளுத்தி மகிழ்ந்த பெண் குழந்தைகள் கூட தைரியமாக பட்டாசு வெடித்து மகிழ்கின்றனர். அந்த அளவுக்கு பட்டாசு தீபாவளி பண்டிகையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அதேநேரம் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகை காற்றில் கலப்பதால் மாசு ஏற்படுகிறது.
நேரக்கட்டுப்பாடு
இதனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கடந்த 2018-ம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற 24-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளியை உற்சாகமாக கொண்டாட மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதற்கேற்ப விதவிதமான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அது பட்டாசு பிரியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து இருக்கிறது.
கூடுதல் நேரம் வேண்டும்
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
ராஜாமணி (நத்தம் கோவில்பட்டி) :- தீபாவளி பண்டிகைக்கு குழந்தைகள் பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து முடித்து தயார் ஆவதற்குள் பட்டாசு வெடிக்கும் நேரம் முடிந்து விடும். எனவே பட்டாசு வெடிக்க வழங்கிய நேரத்தை மாற்ற வேண்டும். அதேபோல் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும்.
ஸ்ரீதரன் (பழனி) :- காற்று மாசு ஏற்படுவதை தடுப்பது முக்கியமானது. அதேநேரம் தீபாவளி திருநாளில் பட்டாசு வெடிப்பது உற்சாகத்தை கொடுக்கும். ஆனால் குறைந்த நேரமாக பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த நேரத்துக்குள் குழந்தைகளை பட்டாசு வெடிக்க வைப்பது சிரமமாக இருக்கும். எனவே பகலில் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கினால் மிகவும் நன்றாக இருக்கும்.
அனைவரின் கடமை
ராஜசேகர் (கன்னிவாடி) :- காற்று மாசு ஆவதை தடுப்பதில் அனைவருக்கும் கடமை இருக்கிறது. எனினும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க குறைந்த நேரமே வழங்கப்பட்டு இருக்கிறது. அது போதுமானதாக இல்லை. சிறுவர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. குறைந்த ஒலி கொண்ட பட்டாசுகளை வெடிப்பது போன்ற கட்டுப்பாடுகள் வரவேற்க கூடியது. அதேநேரம் கூடுதல் நேரம் ஒதுக்கினால் நன்றாக இருக்கும்.
சுகன்யா (பாலகிருஷ்ணாபுரம்) :- பட்டாசு வெடிப்பது தான் தீபாவளி பண்டிகையின் முக்கிய அம்சம். ஆனால் இந்த ஆண்டும் ஏமாற்றம் தான் கிடைத்து இருக்கிறது. காற்று மாசு ஏற்படுவதை தடுக்க கட்டுப்பாடுகள் அவசியம் தேவை. அந்த கட்டுப்பாடுகளை சிறிது, சிறிதாக அதிகப்படுத்தினால் மக்கள் எளிதாக பழகிவிடுவார்கள். அதற்கேற்ப கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
அருண் (பழனி) :- எதிர்காலத்தின் நலன்கருதி காற்று மாசடைவதை தடுப்பது மிகவும் முக்கியமானது. அதேநேரம் நமது பண்டிகைகளை சுதந்திரமாக கொண்டாடுவது அவசியம். பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் என்பது மிகவும் குறைவானது. மேலும் 2 மணி நேரம் வழங்கினால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.