மதுரையில் வேகமாக பரவி வரும் கண்நோய்


மதுரையில் வேகமாக பரவி வரும் கண்நோய்
x

மதுரையில் வேகமாக பரவி வரும் கண்நோய் பாதிப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அரசு டாக்டர் விளக்கம் அளித்தார்.

மதுரை


மதுரையில் வேகமாக பரவி வரும் கண்நோய் பாதிப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அரசு டாக்டர் விளக்கம் அளித்தார்.

கண்நோய்

மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கண் வெண்படல அழற்சி என்ற மெட்ராஸ்- ஐ நோய் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. இதனால், நாளுக்கு நாள் அரசு ஆஸ்பத்திரியின் கண் நோய் சிகிச்சைப்பிரிவுக்கு வந்து செல்லும் வெளி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு தினந்தோறும் 25 முதல் 30-க்கும் மேற்பட்டவர்கள் வெளிநோயாளிகளாக வந்து செல்கின்றனர்.

இந்த எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 120-க்கும் மேற்பட்ட நோயாளிகள் கண் பரிசோதனைக்காக சிகிச்சைக்கு வந்து சென்றுள்ளனர். இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரியில் கண் சிகிச்சைப்பிரிவுத்துறை தலைவர் டாக்டர் விஜயசண்முகம் கூறியதாவது:-

மெட்ராஸ்-ஐ என்று அழைக்கப்படும் கண் வெண்படல நோய் தொற்று, வைரஸ் கிருமியால் பரவி வருகிறது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும். அதாவது, கண்நோயால் பாதிக்கப்பட்டவரை பார்த்தால் இந்த நோய் பரவாது. அவர்களின் கண்களில் இருந்து வெளிவரும் கண்ணீரில் உள்ள வைரஸ் மூலம் மற்றவர்களுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தும்.

கண்களை கசக்கி விட்டு, மேஜை போன்ற பொருட்களில் வைக்கும்போது, அதன் மீது மற்றவர்கள் கை வைத்து கண்களில் கை வைத்தால் அந்த வைரஸ் பரவும். மேலும், இந்த நோய் தொற்று ஒரு கண்ணில் இருந்து மற்றொரு கண்ணுக்கும் பரவி, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரவும் தன்மை கொண்டது.

சுத்தம் அவசியம்

இந்த நோயில் இருந்து தப்பிக்க, கண் மற்றும் கைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்திய துணிகளையோ, பொருட்களையோ பயன்படுத்தக்கூடாது. பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக்கூடாது. அவ்வாறு அனுப்பினால், மற்ற குழந்தைகளுக்கும் பரவிவிடும். கண் பாதிப்பு உள்ளவர்கள், கோவில், உணவகம் மற்றும் திரையரங்கு உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் தங்கள் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்து கொள்வது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story