அரசு பள்ளியில் கண்தானம் விழிப்புணர்வு
பாவூர்சத்திரம் அருகே அரசு பள்ளியில் கண்தானம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டி கிளை நூலகம், பாரதியார் வாசகர் வட்டம் சார்பாக வினைதீர்த்த நாடார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நூலகர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சந்திரசேகர் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வு குழு தலைவரும், அரிமா சங்க வட்டார தலைவருமான கே.ஆர்.பி. இளங்கோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண் தானம் பற்றி மாணவர்களிடையே கலந்துரையாடினார். தொடர்ந்து நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை முதல் மூன்று இடங்கள் பெற்ற மொத்தம் 48 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
மேலும் வட்டார அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவன் தருண் கோபிக்கும் பாரதியார் வாசகர் வட்டம் சார்பாக பரிசு வழங்கப்பட்டது. அனைவருக்கும் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வாசகர் வட்ட தலைவர் தங்கராஜ், வேல்முருகன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் ஆசிரியர் ஆறுமுகநயினார் நன்றி கூறினார்.