ஆகாய தாமரைக்குள் மூழ்கிய கண்மாய்
ராஜபாளையம் பகுதிகளில் கண்மாயை ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன.
ராஜபாளையம்,
ராஜபாளையம் பகுதிகளில் கண்மாயை ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன.
ஆக்கிரமிப்பு
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 117 கண்மாய்கள் உள்ளன. இதில் எண்ணற்ற கண்மாயில் கருவேல மரங்களும், ஆகாய தாமரைகளும் வளர்ந்துள்ளன. இதனால் கண்மாய்களில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை உள்ளதோடு, கண்மாய்களின் அளவு ஆக்கிரமிப்பால் குறைந்து வருகிறது. மழைக்காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழையால் ஆற்றுப்பகுதி வழியாக இந்த கண்மாய்களில் மழை நீர் வந்து சேரும்.
தற்போது கண்மாய்களை பராமரிப்பு செய்யாமல் விட்டதால் கண்மாய் நீர்வரத்து வழிகள் அடைபட்டு மழைநீர் செல்ல வழியின்றி காணப்படுகிறது. மேலும் இந்த பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
ஆகாய தாமரை
இதுகுறித்து விவசாயி முருகேசன் கூறியதாவது:- ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்களில் பழங்காலத்தில் எப்போதும் தண்ணீர் நிறைந்து இருக்கும். இப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக கண்மாய்கள் விளங்கின. இந்த கண்மாய்களை நம்பி விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள்.
தற்போது கண்மாயில் சாக்கடை கழிவு நீர் மற்றும் சாயப்பட்டறை கழிவுகள் கலக்கின்றன. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நிலத்தடி நீர் மட்டம்
மேலும் கண்மாய் பகுதியில் ஆக்கிரமிப்புகள் நிறைந்துள்ளன. ஆதலால் விவசாயம் செய்யும் பரப்பளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும் கண்மாய் முழுவதும் ஆகாயத்தாமரைகள், கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. எனவே கண்மாயில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள ஆகாயதாமரை, கருவேல மரங்கள அகற்றவும், கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இந்த பகுதியில் விவசாயம் தடையின்றி செய்யவும், நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கவும் உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.