கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை கவர வசதிகள் வரப்போகுது


கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை கவர வசதிகள் வரப்போகுது
x

கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை கவர வசதிகள் வரப்போகுது.

கோயம்புத்தூர்


கோவை நகரத்தையொட்டி கோடை காலத்தில் குளிர்ச்சியை அள்ளித்தரும் நீர்வீழ்ச்சி கொட்டும் இடமாக கோவை குற்றாலம் உள்ளது.

கோவை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இந்த குற்றால அருவி உள்ளது. இங்கு கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

கோவை குற்றாலம்

கோவை குற்றால அருவி அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சாடிவயல் சோதனைச்சாவடி வரை வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். பின்னர் அங்கிருந்து அருவிக்கு வனத்துறைக்கு சொந்தமான வாகனங்களில் அழைத்துச்செல்லப்படுகிறார்கள்.

இதற்காக சுற்றுலா பயணிகளிடம் இருந்து கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியையும், அதில் உள்ள வனவிலங்குகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக சோதனை சாவடி அருகே பொருள் விளக்க மையமும் அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அதன் அருகே சிறுவர் பூங்காவும் இருக்கிறது.

அதிகாரி திடீர் ஆய்வு

தற்போது இந்த பூங்காவில் உள்ள விளையாட்டு பொருட்கள் பழுதாகி உள்ளதுடன், பொருள் விளக்க மையத்தில் வைக்கப்பட்டு இருக்கும் வனவிலங்குகளின் புகைப்படங்களும் சேதமடைந்து உள்ளன. எனவே இந்த பொருள் விளக்க மையத்துக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை.

இந்த நிலையில் கோவை மண்டல வனபாதுகாவலர் ராமசுப்பிரமணியன் திடீரென்று சாடிவயல் சோதனை சாவடி சென்றார். பின்னர் அவர் அங்குள்ள பொருள் விளக்க மையத்துக்குள் சென்று ஆய்வு செய்தார். அங்கு சேதமடைந்து உள்ள புகைப்படங்களை அகற்றிவிட்டு வேறு புகைப்படங்களை வைத்து அதற்கான விளக்க காட்சிகளையும் வைக்க வனத்துறைக்கு உத்தரவிட்டார். அத்துடன் பூங்காவில் பழுதான விளையாட்டு பொருட்களை அகற்றிவிட்டு புதிதாக விளையாட்டு பொருட்களை வைக்கவும் அவர் உத்தரவிட்டார்.

இது குறித்து கோவை மண்டல வனபாதுகாவலர் ராமசுப்பிரமணியன் கூறியதாவது:-

பல்வேறு வசதிகள்

கோவை குற்றால அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம். எனவே மேலும் இங்கு சுற்றுலா பயணிகளை கவர பல்வேறு வசதிகள் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது இங்கு உள்ள மர வீடுகள் போன்ற அமைப்புகள் கொண்ட வீடுகளை சரிசெய்து அங்கு இரவு தங்க வசதி செய்து கொடுக்கப்பட இருக்கிறது.

அதுபோன்று அருவிக்கு செல்லும் வழியில் சேதமடைந்து காணப்படும் தொங்குபாலத்தை அகற்றிவிட்டு அங்கு புதிதாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தொங்குபாலம் அமைக்கப்பட உள்ளது. மேலும் ஆங்காங்கே வனவிலங்குகள் போன்று அதன் உருவ பொம்மைகளும் செய்து வைக்கப்பட உள்ளது. இவை உள்பட பல்வேறு வசதிகளை அமைக்கும்போது இன்னும் அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது போளுவாம்பட்டி வனச்சரக அதிகாரி சுசீந்திரன், இயற்கை பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த ஜலாலுதீன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story