இணையதளம், மொபைல் ஆப் மூலம் பட்டா மாறுதல் பெற வசதி


இணையதளம், மொபைல் ஆப் மூலம் பட்டா மாறுதல் பெற வசதி
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:46 PM GMT)

நில அளவைத்துறை சார்பில் இணையதளம், மொபைல் ஆப் மூலம் பட்டா மாறுதல் பெற வசதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

ராமநாதபுரம்

பட்டா மாறுதல்

தமிழ்நாடு நிலஅளவை மற்றும் நிலவரி திட்டத்துறை சார்பில் www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பட்டா மாறுதல்-தமிழ்நிலம் மொபைல் ஆப் மற்றும் பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணைய வழி சேவை Tamil nilam Citizen portal https://tamilnilam.tn.gov.in/citizen/ ஆகியவை உள்ளது. உட்பிரிவு மற்றும் உட்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரி வரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த தமிழ்நிலம் (ஊரகம்) மற்றும் தமிழ்நிலம் (நகரம்) மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து புலப்படங்களிலும் அனைத்து உட்பிரிவு மாற்றங்கள் கொண்டு வர ஏதுவாக கொலாப்லேண்ட் மென்பொருள் உருவாக்கப்பட்டு இந்த இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில்

பட்டா, சிட்டா பார்வையிட மற்றும் சரிபார்க்க அ-பதிவேடு, அரசு புறம்போக்கு நில விவரம், புலப்படம், நகர நில அளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட, பதிவிறக்கம் செய்ய மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களை அறிய எங்கிருந்தும் எந்த நேரத்திலும் இணையவழி சேவை வசதி (www.eservices.tn.gov.in) இந்த இணையதளத்தில் உள்ளது.

ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்க பட்டியல்கள் விவரங்கள் போன்றவை பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகளின் விவரங்கள், இத்துறையின் முக்கிய அரசாணைகள் சுற்றறிக்கைகள், பரப்பளவு மற்றும் அளவு மாற்றங்கள் போன்றவை அறியலாம். எனவே பொதுமக்கள் இணையதளம் மற்றும் தமிழ் நிலம் செயலி மூலம் நில அளவை தொடர்பான விவரங்களை பார்வையிட்டு பயன் படுத்தி கொள்ளலாம் என்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story