கட்டணமில்லா சேவை மூலம் மனநல ஆலோசனை பெறும் வசதி: அமைச்சர் தொடங்கி வைத்தார்


கட்டணமில்லா சேவை மூலம் மனநல ஆலோசனை பெறும் வசதி: அமைச்சர் தொடங்கி வைத்தார்
x

சென்னை தேனாம்பேட்டையில் 14416 கட்டணமில்லா சேவை மூலம் “நட்புடன் உங்களோடு-மனநல சேவை’’ திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை,

சென்னை தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்தில் "நட்புடன் உங்களோடு-மனநல சேவை" திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

24 மணி நேரமும், 7 நாட்களும், தொலைபேசி வழி மனநல சேவைகள் மூலம், எளிதாக அணுகக்கூடிய மற்றும் தரமான மனநல சேவையை வழங்குவதே இந்த நட்புடன் உங்களோடு மனநல சேவைத் திட்டத்தின் முக்கிய நோக்கம். இதன் மூலம் மனநல நிபுணர்களுடன் வீடியோ ஆலோசனைகள், தொடர் சிகிச்சைகள் வழிகாட்டல் உள்ளிட்ட விரிவான மனநல சேவைகள் வழங்கப்படும். ரூ.2 கோடியே 6 லட்சம் மதிப்பில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 14416 புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

"மனநல நல்லாதரவு மன்றங்கள்"

இந்த திட்டத்தின் கீழ் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகள் இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த மனநல மருத்துவ சேவைகள் வழங்கப்படும். தற்போது அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் நலன் காக்கும் "மனநல நல்லாதரவு மன்றங்கள்" தொடங்கப்பட்டுள்ளது. "நான் முதல்வன் திட்டம்" மற்றும் "மாணவர்களின் பொறுப்புக் காவலர் முன்முயற்சி" ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து மனநல நல்லாதரவு மன்றத்தின் சேவைகள் வழங்கப்படும்.

கட்டணமில்லா சேவை

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, மனநல ஆலோசனைகள் வழங்க 104 கட்டணமில்லா சேவை கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி தொடங்கப்பட்டது. இந்த சேவை மூலம் கடந்த ஆண்டு 1,10,971 பேரும், இந்த ஆண்டு 1,45,988 பேரும் ஆலோசனைகள் பெற்றுள்ளனர்.

மன அழுத்தத்தில் உள்ளவர்கள் கட்டணமில்லா தொலைபேசி வழியாக மனநல மருத்துவ சேவைகளை பெறுவதற்கு "நட்புடன் உங்களோடு மனநல சேவை" என்ற சிறப்பு தொலை தூர மனநல சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. எழிலன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story