கோஷ்டி மோதல்; 4 பேர் கைது

கோவை-சத்தி ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சரவணம்பட்டி
கோவை காந்திபுரத்தில் தனியாருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் அன்பரசு என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இந்த கட்டுமான நிறுவனம் சார்பில் கோவை-சத்தி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் கட்டுமான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதில் வடமாநில தொழிலாளர்கள் 40-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதேபோல மற்றொரு கட்டுமான நிறுவனம் சார்பில் அங்கு வேலைகள் நடைபெற்று வருகிறது.
இதிலும் 50-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் தண்ணீர் பிடிப்பதில் 2 நிறுவன கட்டுமான தொழிலாளர்கள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அன்பரசு, மற்றொரு கட்டுமான தொழிலாளர்களிடம் சென்று ஏன் தகராறு செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் அவரை தகாத வார்த்தைகளில் பேசி, தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை தொழிலாளர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து காந்திபுரத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் மேலாளர் சவுந்தரர்ராஜன் அளித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அன்பரசை தாக்கியதாக மும்பையை சேர்ந்த முகமது ஓமர் பஞ்சார் (வயது29), பீகாரை சேர்ந்த முகமத் அஜார் (23) நூர்சல்மான் (31), ஜான்பூரைச் சேர்ந்த தில்சார் (30) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.






