பரமத்திவேலூர் பகுதிவெல்ல ஆலைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை18½ கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல்


பரமத்திவேலூர் பகுதிவெல்ல ஆலைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை18½ கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல்
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் பகுதி வெல்ல ஆலைகளில் திடீர் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 18½ கிலோ கலப்பட வெல்லத்தை பறிமுதல் செய்தனர்.

வெல்ல ஆலைகள்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியான கபிலர்மலை, ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் அதிகளவில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. இந்த நிலையில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிங்காரவேல், முருகன் மற்றும் செல்வகுமார் ஆகியோர் அந்த பகுதிகளில் உள்ள வெல்ல ஆலைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அதன்படி 27 வெல்லம் ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் கலப்படம் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த 18 ஆயிரத்து 540 கிலோ வெல்லத்தை பறிமுதல் செய்தனர். மேலும் வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 500 கிலோ அஸ்கா சர்க்கரையும் பறிமுதல் செய்யப்பட்டது.

எச்சரிக்கை

இதன் காரணமாக 5 வெல்ல ஆலைகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மேலும் 3 ஆலைகளில் வெல்லம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. வெல்லம் தயாரிக்கும் ஆலைகளின் உரிமையாளர்கள் சர்க்கரை மற்றும் வேதி பொருட்களை கலந்து தயாரிக்க கூடாது எனவும், வெல்லங்களில் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த சம்பவத்தால் வெல்ல ஆலைகளில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story