எஸ்எஸ்எல்சி தேர்வில் தோல்வி: மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை கச்சிராயப்பாளையம் அருகே சோகம்
கச்சிராயப்பாளையம் அருகே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள தெங்கியாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி சத்யா. இவர்களுடைய மகன் வெற்றிவேல்(வயது 15). மகள் ஷர்மி. முருகேசன் தனது மனைவி மகளுடன், கேரளாவில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். வெற்றிவேல் மட்டும் தெங்கியாநத்தம் கிராமத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் வெற்றிவேல் தமிழ் பாடத்தில் 23 மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்தார். மொத்தம் 206 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தான்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மனமுடைந்த வெற்றிவேல், நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வெற்றிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.