தேர்வில் தோல்வி, மதிப்பெண் குறைவு; 5 மாணவ, மாணவிகள் தற்கொலை


தேர்வில் தோல்வி, மதிப்பெண் குறைவு; 5 மாணவ, மாணவிகள் தற்கொலை
x

பொதுத்தேர்வில் தோல்வி மற்றும் மதிப்பெண் குறைவு காரணமாக 5 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கே.ஆர்.எம்.நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் ஜீவா(வயது 16). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 வணிகவியல் பிரிவு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் வெளியான பிளஸ்-1 தேர்வு முடிவில் ஜீவா 600-க்கு 280 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். குறைந்த மதிப்பெண் பெற்றதால் விரக்தி அடைந்த அவர் இரவு சிதம்பரம் வல்லம்படுகையில் உள்ள ரெயில்வே தண்டவாளத்திற்கு சென்று, அந்த வழியாக மயிலாடுதுறை நோக்கி சென்ற ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

மற்றொரு மாணவன்

ஈரோடு மாவட்டம் ராமன் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் இறந்துவிட்டார். இவருடைய மனைவி தமிழ்செல்வி. இவர் சித்தோடு அருகே உள்ள ஆவின் கூட்டுறவு ஒன்றியத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய மகன் தானேஸ்வரன் (வயது 16).

அந்தியூர் பருவாச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் தானேஸ்வரன் பிளஸ்-1 படித்து பொதுத்தேர்வு எழுதியிருந்தார். நேற்றுமுன்தினம் வெளியான தேர்வு முடிவில் தமிழ் பாடத்தில் மிகவும் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த தானேஸ்வரன் வீட்டின் குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

2 மாணவிகள்

ராணிப்பேட்டை மாவட்டம் புலிவலம் காலனியை சேர்ந்தவர் முனுசாமி. ஆட்டோ டிரைவர். இவரது இரண்டாவது மகள் தீபிகா (வயது 16) சோளிங்கர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்த தீபிகா தேர்வு முடிவில் 4 பாடத்தில் தோல்வி அடைந்ததால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல் அதே பள்ளியில் பிளஸ்-1 படித்து பொதுத்தேர்வு எழுதியிருந்த சோளிங்கரை அடுத்த வெங்கப்பட்டு கீழ்காலனியை சேர்ந்த குட்டிகுமார் மகள் ரீட்டா (17) 2 பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. இதில் மன வருத்தம் அடைந்த ரீட்டா நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

10-ம் வகுப்பு மாணவிகள்

நாகை காடம்பாடி புதிய நம்பியார் நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த இந்திரா மகள் குணவதி(வயது 15). இவர், நாகையில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுதியிருந்தார். தேர்வு முடிவில் மாணவி குணவதி அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்த விரக்தியில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


Next Story