கோர்ட்டு உத்தரவுகளை மத்திய அரசு முறையாக நிறைவேற்றுவதில்லை - மதுரை ஐக்கோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி
பல்வேறு வழக்குகளில் கோர்ட்டு உத்தரவை முறையாக நிறைவேற்றுவதில்லை என்றும், அதே நேரத்தில் தடை விதித்தால் அதை நீக்க மட்டும் மத்திய அரசு அவசரம் காட்டுவது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மத்திய அரசின் இந்த முறையீட்டுக்கு அதிருப்தியும் தெரிவித்தனர்.
பல்வேறு வழக்குகளில் கோர்ட்டு உத்தரவை முறையாக நிறைவேற்றுவதில்லை என்றும், அதே நேரத்தில் தடை விதித்தால் அதை நீக்க மட்டும் மத்திய அரசு அவசரம் காட்டுவது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மத்திய அரசின் இந்த முறையீட்டுக்கு அதிருப்தியும் தெரிவித்தனர்.
இடைக்கால தடை
ராமநாதபுரம் மோர்பண்ணையை சேர்ந்த வக்கீல் தீரன்திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மத்திய அரசின் சார்பில் வன பாதுகாப்பு திருத்த மசோதா-2023 பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இதற்கான கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும் தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. இந்தி, ஆங்கிலம் தெரியாதவர்கள் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க முடியாது. எனவே, மத்திய அரசின் இந்த அறிவிப்பாைணக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை கடந்த வாரம் விடுமுறை கால கோர்ட்டு விசாரித்தது. வன பாதுகாப்பு திருத்த மசோதா தொடர்பான அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து இருந்தது.
அவசரம் ஏன்?
இந்த தடையை நீக்கி உத்தரவிட மத்திய அரசு சார்பில் வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று மத்திய அரசு வக்கீல் முறையிட்டார்.
இதனையடுத்து நீதிபதிகள், மத்திய அரசின் வன பாதுகாப்பு சட்ட அறிவிப்புக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்ய என்ன அவசரம்?
மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு பல்வேறு வழக்குகளில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்து உள்ளது. அதை எல்லாம் முறையாக நிறைவேற்றுவதில்லை. குறிப்பாக மதுரையில் கடன் வசூல் தீர்ப்பாயம் நீண்ட நாளாக செயல்படாமல் உள்ளது. அதற்கு விசாரணை அதிகாரி நியமனம் செய்ய உத்தரவிட்டும் இதுவரை நிறைவேற்றவில்லை. இது போல பல்வேறு உத்தரவுகள் நிறைவேற்றப்படவில்லை. அப்படி இருக்கும் போது ஐகோர்ட்டு பிறப்பித்த தடையை உடனடியாக நீக்க மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்பதை மட்டும் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? என்று அதிருப்தி தெரிவித்தனர்.
மனுதாக்கல்
பின்னர், உங்களது கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யுங்கள். விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம் எனநீதிபதிகள் தெரிவித்தனர்.