முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்


முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
x

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் சமீரன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

அதிகரிக்கும் பாதிப்பு

கோவை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்தது. அப்போது மாவட்டத்தில் தினமும் சுமார் 4 ஆயிரம் பேர் முதல் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பலர் உயிரிழந்தனர்.

தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எடுத்த நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கடந்த 2 மாதங்களுக்கு முன் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு வந்தது.

இதனால் பொதுமக்கள் கொரோனா அச்சம் இன்றி நிம்மதி அடைந்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கோவையில் கடந்த 22-ந் தேதி 55 பேருக்கும், 23-ந் தேதி 50 பேருக்கும், நேற்று முன்தினம் 64 பேருக்கும், ேநற்று 89 ேபருக்கும் என 4 நாட்களில் 258 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

ரூ.500 அபராதம்

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து அதனை கட்டுக்குள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தநிலையில் கோவை மாவட்டத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவை கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க சுகாதார துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அரசு, தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும். பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்து வசூலிக்க வேண்டும்.

தடுப்பூசி

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களின் சளி மாதிரி எடுத்து மரபணு பகுப்பாய்வு செய்ய வேண்டும். கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரியில் 100 படுக்கைகள், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

2-வது டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்தாதவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


Next Story