பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் போலி தரிசன டிக்கெட் விற்பனை செய்தவருக்கு வலைவீச்சு


பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் போலி தரிசன டிக்கெட் விற்பனை செய்தவருக்கு வலைவீச்சு
x

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் போலி தரிசன டிக்கெட் விற்பனை செய்தவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆடி மாதம் முதல் 14 ஞாயிற்றுக்கிழமைகள் ஆடித்திருவிழா நடைபெறும். தற்போது கோவிலில் ஆடித்திருவிழா நடைபெறுவதால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி விட்டு செல்கின்றனர். இதற்காக கோவில் சார்பாக சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

இக்கூட்டத்தை பயன்படுத்தி போலி தரிசன டிக்கெட்டை சிலர் விற்பதாக கோவிலின் செயல் அலுவலர் பிரகாஷுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே நேற்று முன்தினம் அவர் அனைத்து சிறப்பு தரிசன டிக்கெட் பரிசோதனை செய்தார். அப்பொழுது ஒரு பக்தர் கொண்டு வந்த தரிசன டிக்கெட் போலி என தெரியவந்தது. எனவே, அந்த பக்தரிடம் விசாரணை செய்த போது அந்த டிக்கெட்டை அவரிடம் கொடுத்தது அந்த கோவிலில் வேலை செய்த முன்னாள் ஒப்பந்த ஊழியர், அருண்பாண்டியன் (வயது 35) என்பது தெரிந்தது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் பிரகாஷ் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தலை மறைவான அருண்பாண்டியனை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story