தனியார் மருத்துவமனை பெயரில் போலி இறப்பு சான்றிதழ்
தனியார் மருத்துவமனை பெயரில் போலியாக இறப்பு சான்றிதழ் வழங்கிய இ-சேவை மைய உரிமையாளர் கைதுசெய்யப்பட்டார்.
செல்வபுரம்
தனியார் மருத்துவமனை பெயரில் போலியாக இறப்பு சான்றிதழ் வழங்கிய இ-சேவை மைய உரிமையாளர் கைதுசெய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
போலி இறப்பு சான்றிதழ்
கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் கிருதிக் ஆதித்யா (வயது 30). இவர் தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் செல்வபுரம் போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எல்.ஐ.சி. காலனியில் இ - சேவை மையம் நடத்தி வரும் சத்யராஜ் (40) என்பவர் எங்களது மருத்துவமனையின் பெயரில் போலியான இறப்பு சான்றிதழ் வழங்கி உள்ளார்.
மேலும் மருத்துவமனையின் தலைமை டாக்டரின் பெயரில் போலியான முத்திரைகளையும், கையெழுத்தையும் பயன்படுத்தி சான்றிதழ் வழங்கி வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இ-சேவை மைய உரிமையாளர் கைது
அதன் பேரில் செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விசாரணை நடத்தி சத்யராஜ் மீது போலியான முத்திரையை தயாரித்தல், போலியாக ஆவணத்தை உருவாக்குதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது, தனியார் இ-சேவை மைய உரிமையாளர் சத்யராஜ், தனியார் மருத்துவமனையின் தலைமை டாக்டரின் பெயரில் போலியாக முத்திரையை தயாரித்து கையொப்பமிட்டு போலியாக இறப்பு சான்றிதழ் வழங்கி உள்ளார்.
அதை பெற்றுக்கொண்ட நபர் அதில் உள்ள முகவரியை மாற்றுவதற்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.
அப்போது அங்கு இதுபோன்று இறப்பு சான்றிதழ் வழங்கவில்லை என்பதும், போலி யாக தயாரித்து இறப்பு சான்றிதழ் வழங்கியதும் தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சத்யராஜ் கைது செய்யப்பட்டார் என்றனர்.