போலி டாக்டர் கைது


போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 20 July 2023 7:00 PM GMT (Updated: 20 July 2023 7:01 PM GMT)

நத்தத்தில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்


நத்தம் பகுதியில் முறையான மருத்துவ படிப்பு இல்லாமல் நோயாளிகளுக்கு போலி டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன் தலைமையில் நத்தம் உலுப்பக்குடி வட்டார மருத்துவ அலுவலர் சேக்அப்துல்லா மற்றும் போலீசார் நத்தம் பகுதியில் செயல்படும் மருத்துவமனைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது செட்டியார்குளத்தெரு பகுதியில் செயல்பட்ட ஒரு மருத்துவமனையில் டாக்டராக உள்ள முத்தையா (வயது 50) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் மருத்துவ படிப்புக்கான சான்றிதழ்கள் இருக்கிறதா? என்று கேட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் எஸ்.எஸ்.எல்.சி. வரையே படித்துவிட்டு டாக்டர் என கூறிக்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஊசி மருந்துகள், மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் மருத்துவமனையையும் பூட்டி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். போலி டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் நத்தத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.



Next Story