போலி டாக்டர் கைது


போலி டாக்டர் கைது
x

ஜோலார்பேட்டை அருகே பத்தாம் வகுப்பு படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

அதிகாரிகள் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் டாக்டருக்கு படிக்காமல் ஒருவர் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக திருப்பத்தூர் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அவரது உத்தரவின் பேரில் அரசு மருத்துவர் பாஸ்கர் தலைமையில் சுகாதார துறை அலுவலர்கள் மற்றும் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சி பைரவன் வட்டம் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

போலி டாக்டர் கைது

அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 50) என்பவர் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருவதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அவர் அறையில் வைத்திருந்த மருந்து, மாத்திரைகள், ஊசி போன்றவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை ஜோலார்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு கடந்த நான்கு வருடங்களாக ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அரசு மருத்துவர் பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து போலி டாக்டர் ராஜேந்திரனை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story