போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான போலி டாக்டர் கைது


போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 4 Aug 2023 12:15 AM IST (Updated: 4 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரகண்டநல்லூரில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். என்ஜினீயரிங் படித்துவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவர் ஆவார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்:

அரகண்டநல்லூர் தனலட்சுமி நகரில் மருத்துவம் படிக்காத ஒருவர் மருந்து கடையில் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட மருந்து கடையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு அப்பாவு மகன் பால்ராஜ்(வயது 54) என்பவர், என்ஜினீயரிங் படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.

4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

இது குறித்து விழுப்புரம் அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் லதா அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பால்ராஜ் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கடந்த 31-ந் தேதி இரவு விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். பின்னர் மறுநாள் (அதாவது 1-ந் தேதி) காலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பால்ராஜிக்கு போலீசார் உத்தரவிட்டனர். இதையடுத்து பால்ராஜ் காலையில் விசாரணைக்கு வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

குடும்பத்துடன் தலைமறைவு

பின்னர் 1-ந் தேதி காலையில் நீண்ட நேரமாகியும் பால்ராஜ் விசாரணைக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த அவரை தேடி தனலட்சுமி நகருக்கு சென்ற போது வீடு பூட்டி கிடந்ததை பாா்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் பால்ராஜ் போலீசுக்கு பயந்து வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தலைமறைவாகி இருப்பது தொியவந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியூர் செல்வதற்காக அரகண்டநல்லூர் ரெயில்வே கேட் பஸ் நிறுத்தம் அருகில்நின்றிருந்த பால்ராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை திருக்கோவிலூர் கிளை சிறையில் அடைத்தனர்.


Next Story