போலி பெண் டாக்டர் கைது; மருத்துவமனைக்கு 'சீல்'


போலி பெண் டாக்டர் கைது; மருத்துவமனைக்கு சீல்
x
தினத்தந்தி 16 July 2023 2:30 AM IST (Updated: 16 July 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே போலி பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே போலி பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

மருத்துவமனையில் சோதனை

திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டி அருகே கோபால்பட்டியில், திண்டுக்கல் சாலையில் ஒரு வீட்டில் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. அங்கு மருத்துவ படிப்பு படிக்காமல், பெண் ஒருவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக புகார் வந்தது. அதன்பேரில் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று முன்தினம் அங்கு விரைந்தனர்.

அப்போது மருத்துவமனையில், நோயாளிகளுக்கு பெண் ஒருவர் சிகிச்சை அளித்து கொண்டிருந்தார். அவரிடம் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் கலாவதி (வயது 47) என்றும், கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்றும் தெரியவந்தது.

போலி டாக்டர் கைது

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு குடியேறிய கலாவதி, தனது வீட்டின் கீழ்தளத்தில் மருத்துவமனை நடத்தி வந்துள்ளார். கலாவதியிடம் மருத்துவம் படித்ததற்கான சான்றிதழை மருத்துவ குழுவினர் கேட்டனர். ஆனால் அவர் எந்த சான்றிதழையும் கொடுக்கவில்லை. பள்ளி படிப்பை படித்து விட்டு, டாக்டர் போல கலாவதி சிகிச்சை அளித்து வந்தது மருத்துவ குழுவினரை அதிர்ச்சி அடைய செய்தது.

இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில், கொசவப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் வழக்குப்பதிவு செய்து கலாவதியை கைது செய்தார். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த வேம்பார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுப்புராஜ், மருத்துவமனையாக செயல்பட்ட அறையை பூட்டி 'சீல்' வைத்தார்.


Next Story