வழக்கு நடத்தி தருவதாக பணம் பறித்த போலி பெண் வக்கீல் கைது
மதுரையில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி தருவதாக கூறி பணம் பறித்த போலி பெண் வக்கீல் கைது செய்யப்பட்டார்.
மதுரை,
மதுரையில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி தருவதாக கூறி பணம் பறித்த போலி பெண் வக்கீல் கைது செய்யப்பட்டார்.
கணவன்- மனைவி
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராமர். இவருடைய மனைவி செல்வலீலா. கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தநிலையில், செல்வலீலா வாய்தாவிற்கு வரும்போது, மதுரையை சேர்ந்த கண்ணியம்மாள் என்பவர் அறிமுகமாகி உள்ளார். அவர், தான் ஒரு வக்கீல் என கூறியுதுடன், செல்வலீலாவிடம் வழக்கு நடத்தி தருகிறேன், அதற்கு ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அதனை நம்பிய செல்வலீலா, அந்த பணத்தை கொடுத்துள்ளார்.
இதற்கிடையே நேற்று செல்வலீலா வழக்கு விசாரணைக்காக மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது, அவரிடம் கண்ணியம்மாள் மேலும் ரூ.5 ஆயிரம் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததுடன், நாங்களே சமரசம் செய்து கொள்கிறோம் என்றார்.
இந்தநிலையில், அங்கு வந்த வக்கீல்கள் சிலர், அந்த பெண் ஒரு போலி வக்கீல் என செல்வலீலாவிடம் தெரிவித்துள்ளனர்.
போலீசில் புகார்
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அண்ணாநகர் போலீசார், போலி பெண் வக்கீல் கண்ணியம்மாளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் போலி வக்கீல் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.