போலி மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது
போலி மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு
விழுப்புரம்
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை புறப்பட்ட ஒரு மினி லாரி, விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடியில் நிற்காமல் அதனை கடந்து வேகமாக சென்றது. உடனே போலீசார் இருசக்கர வாகனத்தில் அந்த மினி லாரியை பின்னால் துரத்திச்சென்றபோது குடுமியாங்குப்பம் என்ற இடத்தில் மினி லாரியை அதன் டிரைவர் சாலையோர மரத்தில் மோதிவிட்டு கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். பின்னர் அந்த லாரியை போலீசார் சோதனை செய்ததில் 155 அட்டைப்பெட்டிகளில் 7,440 போலி மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த போலி மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரியையும் விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் புதுச்சேரியை சேர்ந்த இளங்கோ, ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த சரவணன் ஆகியோர் போலி மதுபாட்டில்களை தயாரித்து அதை பெங்களூரு, சென்னை போன்ற இடங்களுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து இளங்கோ, சரவணன் ஆகிய இருவரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை (45)கைது செய்தனர். இளங்கோவை தேடி வருகின்றனர்.