2 ஆயிரம் ரூபாய் போலி நோட்டுகள் கட்டு கட்டாக சிக்கின
கோவை அருகே சினிமாவில் பயன்படுத்தும் 2 ஆயிரம் ரூபாய் போலி நோட்டுகள் கட்டு கட்டாக சிக்கியது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
துடியலூர்
கோவை அருகே சினிமாவில் பயன்படுத்தும் 2 ஆயிரம் ரூபாய் போலி நோட்டுகள் கட்டு கட்டாக சிக்கியது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பண இரட்டிப்பு
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 38). இவர் பெரிநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனி, ஸ்ரீநிதி நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந் தார்.
மேலும் அவர் அங்குள்ள ஒரு தனியார் விளம்பர படப் பிடிப்பு நிறுவனத்தில் புணிபுரிந்து வந்தார். அவருடன் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காளிமுத்து (28) என்பவரும் தங்கியிருந்தார்.
இதனிடையே மோகன்ராஜிக்கு பணத்தை இரட்டிப்பாக்கும் ஒரு கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த கும்பலை சேர்ந்த சடகோபால் என்பவர் மோகன்ராஜிடம் ரூ.5 லட்சம் கொடுத் தால் ரூ.10 லட்சமாக பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி உள்ளார்.
இதை நம்பிய மோகன்ராஜ், பணத்தை இரட்டிப்பாக்க ஆசைப்பட்டு நாமக்கலை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரிடம் ரூ.2 கோடி கடன் வாங்கினார்.
மிரட்டல்
பின்னர் அவர், அந்த ரூ.2 கோடியை பண இரட்டிப்பு கும்பலை சேர்ந்த சடகோபால் உள்ளிட்டோரிடம் வழங்கியதாக தெரிகிறது. இதனிடையே ரவிச்சந்திரன் தன்னிடம் வாங்கிய ரூ.2 கோடி கடனை திருப்பி தரும்படி மோகன்ராஜூக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.
இந்த நிலையில் மோகன்ராஜின் வீட்டில் அவரது உறவினர் விஜயகுமார் (35), காளிமுத்து, மோகன்ராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ரவிச்சந்திரன், மோகன்ராஜிடம் தான் கொடுத்த ரூ.2 கோடி கடனை திருப்பி தரும்படி கேட்டார். உடனே அவர்கள் 3 பேரும் சேர்ந்து பணத்தை தர முடியாது என்று கூறி ரவிச்சந்திரனை மிரட்டி உள்ளனர்.
3 பேர் கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று அவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதையடுத்து போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள அறையில் இருந்த லேப்டாப், செல்போன் கள் மற்றும் இரிடியம் கலச செம்பு உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அங்கு 9 அட்டை பெட்டிகளில் 2 ஆயிரம் ரூபாய் போலி நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. அவை கள்ள நோட்டுகள் என்று கருதி போலீசார் பறிமுதல் செய்தனர்.
அது பற்றி போலீசார் விசாரித்த போது, அது, சினிமா படப்பிடிப்பில் பயன்படுத்தும் போலி ரூபாய் நோட்டுகள் என்பதும், ஒரு விளம்பர படப்பிடிப்பிற்காக வாங்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
புழக்கத்தில் விட்டார்களா?
அந்த நோட்டுகள் அசல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் போல் காட்சி அளித்தாலும் அதில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்பதற்கு பதிலாக சில்ரன் பேங்க் ஆப் இந்தியா என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு இருந்தது.
எனவே அவர்கள் நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் இரிடியம் கலச மோசடியில் ஈடுபட்டார்களா? அல்லது போலி நோட்டு களை கள்ளநோட்டுகள் என்று புழக்கத்தில் விட்டார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.