சேந்தமங்கலத்தில்கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 3 பேர் கைதுரூ.7 லட்சம் கள்ள நோட்டுகள், கார் பறிமுதல்
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் கள்ள நோட்டுகள், கார் பறிமுதல் செய்யப்பட்டது.
3 பேர் கைது
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள கடைவீதி பகுதியில் சிலர் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சி செய்வதாக சேந்தமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து சேந்தமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் கொல்லிமலை சோளக்காட்டை சேர்ந்த செல்லதுரை (வயது 45), எல்லைக்கிராய் பட்டியை சேர்ந்த சதாசிவம் (42), புத்தூர் பட்டியை சேர்ந்த சிலம்பரசன் (36) ஆகிய 3 பேர் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றது தெரியவந்தது.
விசாரணை
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் கள்ள நோட்டுகள் எப்படி கிடைத்தது? அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் யார்? யார்? என்று அவர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேந்தமங்கலத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.