காய்கறிகள் விலை வீழ்ச்சி


காய்கறிகள் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 2 May 2023 12:22 AM IST (Updated: 2 May 2023 12:47 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை உழவர் சந்தையில் காய்கறிகள் விலை வீழ்ச்சியடைந்தது. கத்தரிக்காய், வெண்டைக்காய் கிலோ தலா ரூ.30-க்கு விற்பனையானது.

புதுக்கோட்டை

காய்கறிகள் விலை வீழ்ச்சி

புதுக்கோட்டை உழவர் சந்தையில் கத்தரிக்காய் விலை கடந்த ஆண்டு (2022) நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடுமையாக உயர்ந்திருந்தது. அதிகபட்சமாக கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரைக்கும் விற்பனையானது. வரத்து குறைவால் அதன் விலை உயர்வு அதிகமாக இருந்தது. வெளிமார்க்கெட்டிலும் இதே விலைக்கு தான் விற்றது. இதனால் சமையலில் கத்தரிக்காய் பயன்படுத்துவதை குறைத்தனர்.

அதன்பின் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கத்தரிக்காய் வரத்து தொடங்கியது. இதனால் விலை கொஞ்சம் குறைய ஆரம்பித்தது. இருப்பினும் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரைக்கும் விற்று வந்தது. தற்போது கத்தரிக்காய் வரத்து அதிகரித்ததால் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கிலோ ரூ.30-க்கு விற்பனையாகுகிறது. இதேபோல வெண்டைக்காய் விலையும் ரூ.60-ல் இருந்து குறைந்து ரூ.30-க்கு விற்கிறது. முருங்கைக்காய் வரத்து அதிகரிப்பால் அதன் விலையும் ரூ.80-ல் இருந்து குறைந்து ரூ.20-க்கு விற்கிறது.

காய்கறிகள் விலை விவரம்

புதுக்கோட்டை உழவர் சந்தையில் விற்பனையான காய்கறிகளின் சிலவற்றின் விலை விவரம் கிலோ கணக்கில் வருமாறு:- தக்காளி ரூ.14-க்கும், அவரைக்காய் ரூ.65-க்கும், முள்ளங்கி ரூ.20-க்கும், கேரட் ரூ.45-க்கும், பீன்ஸ் ரூ.80-க்கும், பிட்ரூட் ரூ.30-க்கும், புடலங்காய் ரூ.25-க்கும், பாகற்காய் ரூ.35-க்கும், சுரைக்காய் ரூ.10-க்கும், பூசணிக்காய் ரூ.10-க்கும், முருங்கைக்காய் ரூ.20-க்கும், முட்டைக்கோஸ் ரூ.16-க்கும், சின்ன வெங்காயம் ரூ.45-க்கும், பெரிய வெங்காயம் ரூ.20-க்கும், உருளை கிழங்கு ரூ.30-க்கும், சேனை கிழங்கு ரூ.50-க்கும், கருணை கிழங்கு ரூ.30-க்கும் விற்றது. வெளி மார்க்கெட்டிலும் காய்கறிகள் விலை குறைவு குறித்து தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

மேலும் விலை குறைய வாய்ப்பு

காய்கறி மொத்த வியாபாரி அழகு சீனிவாசன்:- ``கத்தரிக்காய் கடந்த சில மாதங்களாக ஒட்டன்சத்திரம் உள்பட வெளி மார்க்கெட்டில் இருந்து புதுக்கோட்டை சந்தைக்கு வரத்து இருந்தது. உள்ளூரில் போதுமான விளைச்சல் இல்லாததால் வெளி மார்க்கெட் கத்தரிக்காய் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. தற்போது சீசன் ஆரம்பித்து உள்ளதால் உள்ளூர் கத்தரிக்காய்கள் விளைச்சல் அதிகரித்து வரத்து தொடங்கி உள்ளது.

கொத்தக்கோட்டை, கந்தர்வகோட்டை, அண்டகுளம், நார்த்தாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கத்தரிக்காய்கள் வரத்து உள்ளது. செல்லுக்குடியில் கத்தரிக்காய் செடி நடவு செய்துள்ளனர். இதில் சாகுபடியானதும் வரத்து அதிகரிக்கும். இதனால் கத்தரிக்காய் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. மற்ற காய்கறிகளை பொறுத்தவரையிலும் சராசரியாக ரூ.10 முதல் ரூ.20 வரை குறைந்துள்ளது''.

ஓட்டல்கள்

சிறிய அளவில் உணவகம் நடத்தும் அடைக்கன்:- ``தற்போது முகூர்த்த சீசன் இல்லாததால் காய்கறிகள் விலை குறைந்துள்ளது. முகூர்த்த சீசன் அதிகரித்தால் காய்கறிகள் விலை சற்று உயர வாய்ப்பு உள்ளது. இருப்பினும் தற்போது கத்தரிக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, முருங்கைக்காய் விலை குறைந்துள்ளது. இதனால் ஓட்டல்களில் மதிய சாப்பாட்டிற்கு இந்த காய்கள் தான் தற்போது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மற்ற காய்கறிகளின் விலையும் ஓரளவு சராசரியாக உள்ளது.''

ஆரோக்கியமான வாழ்வு

குடும்ப தலைவி அமிர்தா ஞானவேல்:- ``கடந்த மாதங்களை விட தற்போது காய்கறி விலை குறைந்துள்ளது. இதனால் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தக்ககூடிய காய்கறிகள் அளவு அதிகரித்ததோடு, விலை குறைவு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காய்கறிகள் ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும். இன்னும் விலை குறைந்தால் மக்களுக்கு மகிழ்ச்சி தான். காய்கறிகளை உணவில் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் விலை உயர்வாக இருக்கும் போது அதனை வாங்கும் சக்தி குறைவாக உள்ளது. காய்கறிகள் விலை குறைவால் அதனை தாரளமாக வாங்கி பயன்படுத்த முடியும். விவசாயிகளும் காய்கறிகள் விளைச்சலை அதிகரிக்க அதிகம் ஈடுபட வேண்டும்.''

உழவர்சந்தை வட்டாரத்தில் கூறுகையில், ``தற்போது காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால் அவற்றின் விலைகள் பெருமளவு குறைந்துள்ளது. கோடை மழை, வெயில் தாக்கத்தில் அதன் விளைச்சலை பொறுத்து வருகிற நாட்களில் அதன் விலை அமையும்'' என்றனர்.


Next Story