பர்கூர் மலைப்பகுதி ஈரெட்டியில் 100 அடி உயரத்தில் இருந்து கொட்டும் அழகான திடீர் அருவி; சுற்றுலா பயணிகள் சென்று வர பாதை அமைக்க கோரிக்கை

பர்கூர் மலைப்பகுதி ஈரெட்டியில் 100 அடி உயரத்தில் இருந்து கொட்டும் அழகான திடீர் அருவி; சுற்றுலா பயணிகள் சென்று வர பாதை அமைக்க கோரிக்கை
x

பர்கூர் மலைப்பகுதியில் உள்ள ஈரெட்டி கிராமத்தில் 100 அடி உயரத்தில் இருந்து அழகான திடீர் அருவி கொட்டுகிறது. அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல பாதை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஈரோடு

அந்தியூர்

பர்கூர் மலைப்பகுதியில் உள்ள ஈரெட்டி கிராமத்தில் 100 அடி உயரத்தில் இருந்து அழகான திடீர் அருவி கொட்டுகிறது. அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல பாதை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அழகான அருவி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் பர்கூர் மலைப்பகுதி மற்றும் வனப்பகுதியில் உள்ள குட்டைகள் நிரம்பியுள்ளன. காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

காட்டாறுகள் மலை இடுக்குகளில் புகுந்து பள்ளத்தை நோக்கி பாயும்போது பல்வேறு இடங்களில் சிறிய திடீர் அருவிகள் தோன்றுவது வழக்கம். ஒரு நாள் அல்லது 2 நாளில் இத்தகைய அருவிகளில் தண்ணீர் நின்றுவிடும். ஆனால் ஈரெட்டி மலை கிராமத்தில் கடந்த 10 நாட்களாக சுமார் 100 அடி உயரத்தில் இருந்து திடீர் அருவி அழகாய் தோன்றி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

செல்பி

பர்கூர் மலைப்பகுதியில் மழை அவ்வப்போது நிற்பதும், பெய்வதுமாக இருந்தாலும் ஈரெட்டி அருவியில் ஒரே அளவில் தண்ணீர் கொட்டுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் பர்கூர் மலையை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் ஈரெட்டி கிராமத்துக்கு வருகிறார்கள்.

அங்குள்ள வனப்பகுதி பாதையில் சென்று அருவியில் ஆனந்தமாய் குளிக்கிறார்கள். செல்போனில் விதவிதமாய் செல்பி எடுத்து மகிழ்கிறார்கள்.

பாதையை சீரமைக்க...

இதுபற்றி ஈரெட்டி கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறும்போது, '10 நாட்களாக அருவியில் தண்ணீர் நிற்காமல் கொட்டுகிறது. இதுபோல் பெரிய அருவி இருப்பது இன்னும் வெளியூரை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு தெரியாது. தெரிந்தால் அதிக அளவில் வருவார்கள் தற்போது அருவிக்கு செல்லும் பாதை எளிதாக இல்லை. அதனால் சுற்றுலா துறை அதிகாரிகள் இங்கு வந்து பார்த்து சுற்றுலா பயணிகள் எளிதில் சென்று வரும் அளவுக்கு பாதையை சீரமைத்துக்கொடுக்கவேண்டும்' என்றார்.

Next Story