வடகிழக்கு பருவமழை குறைந்ததால் விவசாயிகள் கவலை


வடகிழக்கு பருவமழை குறைந்ததால் விவசாயிகள் கவலை
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடகிழக்கு பருவமழை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடகிழக்கு பருவமழை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பருவமழை

ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரே நீர் ஆதாரம் வடகிழக்கு பருவமழையும், வைகை தண்ணீரும்தான். இந்த இரண்டும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஒன்றாக வந்து கைகொடுக்கும். மற்ற நாட்களில் தேவைப்படும்போது கிடைக்காமல் தேவையில்லாமல் வந்து கடலில் கலந்து வீணாகிவிடுவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு வைகை தண்ணீரும், வடகிழக்கு பருவமழையும் நன்றாக பெய்ததால் விவசாயம் நன்றாக இருந்தது.

குறிப்பாக நெல் விவசாயமும், பருத்தி விவசாயமும் விவசாயிகளுக்கு கைகொடுத்தது. இந்த ஆண்டு பருவமழைக்கு முன்னதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நல்ல மழை பெய்தது. வைகை அணையில் இருந்து பருவ காலத்திற்கு முன்னதாகவே உபரி நீர் அளவுக்கதிகமாக திறந்துவிடப்பட்டு ராமநாதபுரம் வந்தது. இந்த தண்ணீரை முறையாக நீர்நிலைகளுக்கு திருப்பிவிட திட்டமிட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் பல ஆயிரக்கணக்கான கனஅடி தண்ணீர் தற்போதுவரை கடலில் கலந்து வீணாகி வருகிறது. இதன்காரணமாக வைகை தண்ணீர் வந்தும் பலனின்றி போய்விட்டது. இவ்வளவு தண்ணீர் கடலில் கலந்து வீணாகி வரும் நிலையிலும் கடலாடி, முதுகுளத்தூர், கமுதி போன்ற பகுதிகளில் நிரப்ப வேண்டிய நிலையில் உள்ள நீர்நிலைகள் தண்ணீரின்றி காய்ந்து கிடக்கிறது என்பதுதான் வேதனையான விசயம்.

இந்தநிலையில் கண்மாய் பாசனம் பெரிய கண்மாய், சக்கரக்கோட்டை கண்மாய் மட்டுமே பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஓரளவு சற்று ஆதரவை தந்துள்ளது. வைகை அணையில் ராமநாதபுரம் கணக்கில் தண்ணீர் எடுக்கப்படாமல் உள்ளது விவசாயிகள் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதலை மட்டுமே அதிகாரிகள் கூறி வருகின்றனர். கண்மாய் பாசனம் இவ்வாறு இருக்க வடகிழக்கு பருவமழையும் இந்த ஆண்டு நன்றாக பெய்யும் என்று விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தனர். அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப வடகிழக்கு பருவமழை நன்றாக தொடங்கியது. ஆனால், அதன்பின்னர் மழை அதிகஅளவில் பெய்யவில்லை.

சராசரி மழை அளவு

மாவட்டத்தின் சராசரி மழை அளவு 827 மில்லி மீட்டர் ஆகும். கடந்த ஆண்டு 1,098 மில்லிமீட்டரும், கடந்த 2020ம் ஆண்டு 845 மில்லி மீட்டரும் மழை பெய்தது. இந்த ஆண்டு இதுவரை 600 மில்லி மீட்டர்தான் மழை பெய்துள்ளது. குறிப்பாக நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யும் நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 1,054 மில்லி மீட்டரும், கடந்த 2020-ம் ஆண்டு 547 மில்லி மீட்டரும், இந்த ஆண்டு இதுவரை 610 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. ஏறத்தாழ 210 மில்லி மீட்டருக்கு மேல் குறைவாக பெய்துள்ளது.

இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் விவசாயிகள் நெல்விளைச்சல் நன்றாக இருக்குமா என்ற நம்பிக்கையை இழந்து வருகின்றனர். வைகை அணையில் இருந்து இனிவரும் தண்ணீரையாவது அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு முறையான அளவில் திருப்பிவிட்டு நீர்நிலைகளை நிரப்பினால் மட்டுமே ஓரளவு விவசாயம் தப்பிக்கும் என்ற நிலை உருவாகி உள்ளது.


Next Story