குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை விழிப்புணர்வு முகாம்
கே.வி.குப்பம் அருகே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கே.வி.குப்பம் தாலுகா, வேப்பங்கனேரி ஊராட்சியில், உயர் பிறப்பு வரிசை குறைப்பு என்னும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.வி.கே.மோகன் தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் பி.ஜி.முருகேஷ், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ர.மைதிலி, வட்டார சுகாதார புள்ளி இயலாளர் நவசக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் செழியன் வரவேற்றார்.
வேலூர் மாவட்ட விரிவாக்கக் கல்வியாளர் பழனிமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். முகாமில் அளவான குடும்பம் அமைத்துக் கொள்வதற்கு இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்வது போதும், கருத்தரிப்பதால், எந்த மாதிரியான நபர்கள் பாதிக்கப்படுவார்கள்? போன்ற உடல்நிலை குறித்த விழிப்புணர்வுகள், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை, கணவன் மனைவி இருவரில், தகுதியான ஒருவர் ஏற்றுக் கொள்வதற்கான மனநிலையை உருவாக்குவது குறித்த கருத்துக்களை பொதுமக்களிடையே எடுத்துக் கூறினர். இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆண், பெண் என 95 பேர் பங்கேற்றனர். சமுதாய நல செவிலியர் ஆர்.சுமதி நன்றி கூறினார்.