செங்குன்றம் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை


செங்குன்றம் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை
x

செங்குன்றம் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது நண்பர்கள் 3 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட சோலையம்மன் நகர் சுப்பிரமணிய பாரதி தெருவைச் சேர்ந்தவர் மதி என்ற மதிவாணன்(வயது 28). பிரபல ரவுடியான இவர் மீது செங்குன்றம், சோழவரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர், தன்னுடைய நண்பர்களான ஹேம்நாத், சரத்குமார், தனுஷ் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் படுத்து தூங்கினார். நள்ளிரவில் அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.

வெட்டிக்கொலை

பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்ற கும்பல், அங்கு தூங்கி கொண்டிருந்த மதிவாணன் உள்பட 4 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த 4 பேரும் தப்பி ஓட முயன்றும், அவர்களை விடாமல் மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த ரவுடி மதிவாணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர்களான ஹேம்நாத், சரத்குமார், தனுஷ் ஆகிய 3 பேரும் பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடினர்.

2 பேர் கைது

இது குறித்து தகவல் அறிந்துவந்த சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் உயிருக்கு போராடிய 3 பேரையும் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் இவர்களை வெட்டி விட்டு அந்த கும்பல் ஆட்டோவில் ஆவடி அருகே தப்பிச் சென்று கொண்டிருந்தது. அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார் அந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில் அரிவாளுடன் இருந்த 5 பேரையும் மடக்கி பிடிக்க முயன்றனர். அதில் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

ராம்கி(25), சூர்யா என்ற சொட்ட சூர்யா(26) ஆகிய 2 பேர் மட்டும் போலீசாரிடம் சிக்கினர். அவர்களை பிடித்த முத்தாபுதுப்பேட்டை போலீசார், சோழவரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை சோழவரம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள்கள், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

பழிக்குப்பழி

விசாரணையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல ரவுடி மணி என்ற கஞ்சா மணி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி மதிவாணன் முக்கிய குற்றவாளியாக இருந்தார்.

எனவே இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக கஞ்சா மணியின் தம்பி பிரபா என்ற பிரபாகரன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மதிவாணனை வெட்டிக்கொலை செய்தது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பிரபாகரன் உள்பட 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story