வருகிற 1-ந்தேதி முதல் நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு
சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வருகிற 1-ந்தேதி முதல் உயர்த்தப்படுகிறது.
சென்னை,
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் உள்ள சாலைகளில் சுங்க கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் திருத்தி அமைக்கப்படுகிறது. அந்தவகையில், மத்திய கைலாஸ் முதல் மாமல்லபுரம் வரையிலான ராஜீவ்காந்தி சாலை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரித்து வருகிறது. ராஜீவ்காந்தி சாலை (பழைய மாமல்லபுரம் சாலை) என்று அழைக்கப்படும் தகவல் தொழில்நுட்பம் அதிவிரைவு சாலையில் இருந்த 5 சுங்கச்சாவடிகளில் 4 சுங்கச்சாவடிகள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் பயன்பாட்டில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடியில் வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது.
அதன்படி ஒரு முறை பயணிக்க ஆட்டோ கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.11 ஆகவும், கார் மற்றும் ஜீப்களுக்கு கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.33 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் ஒரு முறை சென்று திரும்ப ரூ.22, ஒரு நாள் முழுவதும் பல முறை பயணிக்க ரூ.37, மாதம் முழுவதும் பயணம் செய்வதற்கான பயண அட்டை ரூ.345 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சரக்கு வாகனங்கள்
அதேபோல், இலகுரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் ரூ.49-ல் இருந்து ரூ.54 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு முறை சென்று திரும்ப ரூ.108, ஒரு நாள் முழுவதும் பல முறை பயணிக்க ரூ.150, மாதம் முழுவதும் பயணம் செய்வதற்கான பயண அட்டை ரூ.3,365 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பஸ்களுக்கான கட்டணம் ரூ.78-ல் இருந்து ரூ.86 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு முறை சென்று திரும்ப ரூ.170, ஒரு நாள் முழுவதும் பல முறை பயணிக்க ரூ.255, மாதம் முழுவதும் பயணம் செய்வதற்கான பயண அட்டை ரூ.5 ஆயிரத்து 570 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்கள் மாதம் முழுவதும் பயணிக்க காருக்கு ரூ.350, இலகுரக வாகனங்களுக்கு ரூ.400, டிரக்குகள் மற்றும் பல அச்சு வாகனங்களுக்கு ரூ.1,100 கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுங்க கட்டண உயர்வு ஜூலை 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தகவல் தொழில்நுட்ப அதிவிரைவு சாலை திட்டத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.