8 மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது


8 மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது
x

லாலாபேட்டை அருகே பயிர்களை நாசம் செய்ததால் ஆத்திரம் அடைந்து, 8 மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கரூர்

செடிகளை சேதப்படுத்தி...

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள பிள்ளப்பாளையத்தை சேர்ந்தவர் மாரியாயி. இவருக்கு சொந்தமான சுமார் 1½ ஏக்கர் விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை மகளிபட்டியை சேர்ந்த முருகானந்தம்(வயது 40) என்ற விவசாயி குத்தகைக்கு எடுத்து கடந்த 5 ஆண்டுகளாக விசாயம் செய்து வருகிறார். தற்போது தோட்டத்தில் பீர்க்கங்காய் செடிகளை பயிரிட்டுள்ளார். தற்போது செடிகள் நன்கு வளர்ந்துள்ளது.

இந்த நிலையில் மயில்கள் கூட்டம், கூட்டமாக வந்து செடிகளை சேதப்படுத்தி வந்துள்ளன. இதனால் ஆத்திரம் அடைந்த முருகானந்தம் மயில்களை கொல்வதற்கு முடிவு செய்தார். தினந்தோறும் மயில்கள் வந்து திரியும் கூட்டத்தைக் கண்டு நேற்று முன்தினம் நெல்மணியில் விஷத்தை கலந்து அப்பகுதியில் வைத்துள்ளதாக தெரிகிறது.

8 மயில்கள் செத்தன

வழக்கம்போல் இரை தேடி வந்த மயில்கள் விஷம் கலந்த நெல்மணிகளை சாப்பிட்டன. பின்னர் சிறிது நேரத்தில் ஒவ்வொன்றாக மயக்கம் அடைந்து ஆங்காங்கே உயிரிழந்தன. இதில் 2 ஆண் மயில்கள், 6 பெண் மயில்கள் என மொத்தம் 8 மயில்கள் உயிரிழந்தன. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் தோட்டத்திற்கு வந்த முருகானந்தம் மயில்கள் இறந்து கிடப்பதை பார்த்தார்.

பின்னர் தனக்கு ஒன்றும் தெரியாதது போல், தனது தோட்டத்தில் மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடக்கின்றன என பிள்ளபாளையம் கிராம நிர்வாக அதிகாரி முரளிதரனுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார்.

சிறையில் அடைப்பு

பின்னர் அவர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அலுவலர் சாமியப்பன், வனக்காப்பாளர் சிவரஞ்சனி மற்றும் லாலாபேட்டை போலீசார் இறந்து கிடந்த மயில்களை மீட்டனர். பின்னர் இறந்த மயில்களை கள்ளப்பள்ளி கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு நடந்த பிரேத பரிசோதனையில் மயில்கள் நெல்மணியில் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து முருகானந்தத்தின் மீது சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மயில்களுக்கு விஷம் வைத்து கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story