நிலப்பிரச்சினையில் விவசாயி அடித்துக்கொலை


நிலப்பிரச்சினையில் விவசாயி அடித்துக்கொலை
x

வேடசந்தூர் அருகே நிலப்பிரச்சினையில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

நிலம் விற்க முயற்சி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஒத்தையூரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 62). விவசாயி. இவரது மனைவி குழந்தைதெரசா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.

இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் ஆரோக்கியசாமியும், அவரது மனைவியும் தனியாக வசித்து வந்தனர். ஆரோக்கியசாமிக்கு மாரம்பாடி அருகே உள்ள பெரியகுளத்துப்பட்டியில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரம்பாடியை சேர்ந்த ஒருவருக்கு விற்பதற்கு ஆரோக்கியசாமி விலை பேசினார். இதற்காக அவரிடம் இருந்து முன்பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

மின்மோட்டார் பிரச்சினை

அந்த நிலத்தில் கிணறு ஒன்று உள்ளது. அதில் இருந்த மின்மோட்டாரை ஆரோக்கியசாமி கழற்றி தனது வீட்டிற்கு எடுத்து வந்துவிட்டார். இதையறிந்த மாரம்பாடியை சேர்ந்தவர் தனக்கு நிலம் வேண்டாம் என்று கூறினார்.

இந்நிலையில் ஆரோக்கியசாமியும், அவரது மனைவியும் வீட்டில் இருந்தனர். அப்போது ஆரோக்கியசாமியின் உறவினரும் பெரியகுளத்துப்பட்டியை சேர்ந்த கார் டிரைவரான பிரவீன்குமார் (32) வீட்டுக்கு வந்தார்.அப்போது அவர் ஆரோக்கியசாமியிடம் மின்மோட்டாரை திரும்ப கொடுக்குமாறும், இந்த பிரச்சினையால் நிலத்தை விற்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

அடித்துக்கொலை

அதற்கு ஆரோக்கியசாமி மின்மோட்டாரை தரமுடியாது என்றார். மேலும் அந்த நிலத்தை மட்டுமே விற்க பேசினேன் என்றும் அவர் கூறினார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த பிரவீன்குமார் அங்கு இருந்த கட்டையை எடுத்து ஆரோக்கியசாமியின் தலையில் ஓங்கி அடித்தார். படுகாயம் அடைந்த ஆரோக்கியசாமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அவருடைய மனைவி அலறி கூச்சலிட்டார். உடனே பிரவீன்குமார் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.

கைது

இது குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆரோக்கியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர்.

குழந்தைதெரசா கொடுத்த புகாரின்பேரில், வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்தார். நிலம் விற்பதில் பிரச்சினை ஏற்பட்டு, விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story