நிலத்தகராறில் விவசாயி அடித்துக் கொலை


நிலத்தகராறில் விவசாயி அடித்துக் கொலை
x

திசையன்விளை அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விவசாயி

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 60). அதே தெருவை சேர்ந்தவர் முருகன் (35). இவர்கள் 2 பேரும் விவசாயிகள் ஆவர்.

இவர்களுக்கு சொந்தமான விவசாய தோட்டம் காரிதோட்டம் என்ற இடத்தில் அருகருகே உள்ளது. இந்த தோட்டம் எல்கை தொடர்பாக 2 குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அடித்துக் கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் முருகன் தோட்டத்தின் எல்கை பகுதியில் உள்ள முள்மரங்களை வெட்டினார். அப்போது, அங்கு வந்த நடராஜன் நிலத்தை அளந்து அதன்பிறகு மரங்களை வெட்டும்படி கூறினார். அதற்கு முருகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் கையில் வைத்து இருந்த மண்வெட்டியால் நடராஜன் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

கைது

இதுகுறித்து உடனடியாக திசையன்விளை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கொலை செய்யப்பட்ட நடராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடராஜன் மகன் சேர்மராஜா அளித்த புகாரின் பேரில் ேபாலீசார் வழக்குப்பதிந்து முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story