கோத்தகிரியில், தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
கோத்தகிரியில், தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
கோத்தகிரி: கோத்தகிரி அருகே ஆடத்தொரை கிராமத்தை சேர்ந்த கோபால் என்பவரது மகன் நந்தகுமார்(வயது 46). விவசாயியான இவருக்கு திருமணம் ஆகி பிரியா என்ற மனைவியும், 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதற்கிடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கருத்துவேறுபாடு காரணமாக நந்தகுமாரை, அவரது மனைவி பிரியா, குழந்தைகளுடன் பிரிந்து சென்று தனது பெற்றோரின் ஊரான கேரளாவிற்கு சென்று அங்கு வசித்து வருகிறார். நந்தகுமார், தனது சகோதரி சூரியகுமாரியுடன் தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். மேலும் மனைவி, பிள்ளைகள் தன்னை விட்டு பிரிந்து சென்றதால் நந்தகுமார் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் நந்தகுமார் தூக்குப்போட்டு தற்கெலை செய்துள்ளார்.
தேயிலை தோட்ட வேலைக்கு சென்றுவிட்டு மாலை 5 மணிக்கு வீட்டிற்கு திரும்பிய சூரியகுமாரி, நந்தகுமார் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது பிரேத பரிசோதனையில் களைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு, பின்னர் தூக்குப்போட்டு நந்தகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.