மின்னல் தாக்கி விவசாயி சாவு
திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்னல் தாக்கியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
திருவெண்ணெய்நல்லூர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் சீக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 65). விவசாயி. இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் (45) என்பவருடன் திருவெண்ணெய்நல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றார்.
பின்னர் அவர்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு டி.கொளத்தூர் வழியாக மொபட்டில் ஊருக்கு புறப்பட்டனர். பூசாரிபாளையம் முனியப்பர் கோவில் அருகே சென்றபோது இடி. மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர்கள் 2 பேரும் மொபட்டில் இருந்து கீழே விழுந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே ராமசாமி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பழனிவேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போலீசார் விசாரணை
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கியதில் விவசாயி பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.