மின்னல் தாக்கி விவசாயி பலி


மின்னல் தாக்கி விவசாயி பலி
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலியானார்.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே மின்னல் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

பலத்த மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்திலும் ேநற்று பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. தென்காசியில் காலையில் இருந்து மிதமான வெயில் அடித்தது. மாலை 5 மணிக்கு சிறிது நேரம் சாரல் மழை பெய்தது.

தென்காசி, மேலகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 6 மணிக்கு பலத்த மழை பெய்தது. சுமார் ½ மணி நேரம் இந்த மழை நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மின்னல் தாக்கி விவசாயி சாவு

ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைகுளம் பகுதியை சேர்ந்தவர் பச்சிராஜன் (வயது 54). விவசாயி. இவர் தற்போது குடும்பத்துடன் ஆழ்வார்குறிச்சியில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடையம், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், ஆம்பூர் ஆகிய பகுதிகளில் நேற்று மதியம் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

அப்போது பச்சிராஜன் ஆழ்வார்குறிச்சியில் இருந்து ஆம்பூர் செல்லும் வழியில் உள்ள ஒரு வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். திடீரென மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அருகில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த வேலு என்பவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அம்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பச்சிராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story