விழுப்புரம் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி
விழுப்புரம் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலியானாா்.
விழுப்புரத்தை அடுத்த கெடார் அருகே உள்ள செல்லங்குப்பம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 50), விவசாயி. இவருடைய நிலம் அதே கிராமத்தில் உள்ளது. நேற்று மாலை கலியமூர்த்தி, தனது நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. உடனே கலியமூர்த்தி, தனது நிலத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றார்.அப்போது திடீரென அவரை மின்னல் தாக்கியது. இதில் உடல்கருகி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையறிந்ததும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அங்கு விரைந்து வந்து கலியமூர்த்தியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்த தகவலின்பேரில் கெடார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலியமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.