மின்னல் தாக்கி விவசாயி பலி


மின்னல் தாக்கி விவசாயி பலி
x

நெல்லையில் கோடை மழை பெய்தபோது, மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

திருநெல்வேலி

நெல்லையில் கோடை மழை பெய்தபோது, மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

கோடை மழை

நெல்லையில் தற்போது கத்திரி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மதிய வேளையில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. இருந்தாலும் அவ்வப்போது கோடை மழை பெய்து வெப்பம் தணிவதால் மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்து வருகின்றனர்.

நேற்று முன்தினமும் காலை முதல் மதியம் வரை வெயில் கொளுத்தியது. மாலை 3 மணிக்கு மேல் பெய்ய தொடங்கிய கோடை மழை சுமாா் ஒருமணி நேரம் நீடித்தது. சூறைக்காற்றுடன் பெய்த மழையால் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதான கேலரி மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. மேலும் ஒரு சில இடங்களில் மரங்களும் விழுந்தன.

மின்னல் தாக்கி...

இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடி-மின்னலுடன் மழை பெய்தது. நெல்லை அருகே மருதன்குளத்தை சேர்ந்த விவசாயி பழனி (வயது 75) நேற்று முன்தினம் மதியம் பொன்னாக்குடியில் உள்ள தனது தோட்டத்துக்கு வேலைக்கு சென்றார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மகன் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில், முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தோட்டத்துக்கு சென்ற விவசாயி மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story