கழுத்தை அறுத்து விவசாயி கொலை, சொத்து தகராறில் மகன் வெறிச்செயல்


கழுத்தை அறுத்து விவசாயி கொலை, சொத்து தகராறில் மகன் வெறிச்செயல்
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே சொத்து தகராறில் விவசாயியை கழுத்தை அறுத்து கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி

ஊட்டி: ஊட்டி அருகே சொத்து தகராறில் விவசாயியை கழுத்தை அறுத்து கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

விவசாயி

ஊட்டி அடுத்த கடநாடு அருகே உள்ள மந்தலாடி கிராமத்தை சேர்ந்தவர் ரகு(வயது 53). விவசாயி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு விவேகானந்தன்(25) என்ற மகனும், யஸ்வந்தி என்ற மகளும் உள்ளனர். இதில் யஸ்வந்திக்கு திருமணமாகி குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். பத்தாம் வகுப்பு முடித்துள்ள விவேகானந்தன் ஊட்டியில் உள்ள தங்கும் விடுதியில் ஊழியராக பணியாற்றி வந்தார். தந்தை-மகன் இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருப்பதால் அவர்கள் மது அருந்திவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கழுத்தை அறுத்து கொலை

இந்த நிலையில் சாந்தி பெங்களூருவில் உள்ள மகள் யஸ்வந்தி வீட்டில் கடந்த ஒரு மாதமாக தங்கியிருந்தார். இதனால் தந்தையும், மகனும் மட்டும் வீட்டில் இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரகு தனக்கு சொந்தமான நிலத்தை விற்பதற்காக ஒருவரிடம் முன்பணம் வாங்கியுள்ளார். மேலும் அந்த பணத்தை அவர் செலவழித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையறிந்து ஆத்திரமடைந்த விவேகானந்தன் மதுபோதையில் இதுகுறித்து ரகுவிடம் கேள்வி கேட்டுள்ளார். அப்போது அவரும் மதுபோதையில் இருந்ததால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த விவேகானந்தன் தந்தை என்றும் பாராமல் வீட்டில் இருந்த கத்தியால் ரகுவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

மகன் கைது

இதைத்தொடர்ந்து சிறிதுநேரம் கழித்து மதுபோதை தெளிந்த நிலையில், தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டதாக தாயிடம் கூறி விவேகானந்தன் அழுததாக கூறப்படுகிறது. இதற்கிடையே தகவல் அறிந்த தேனாடுகம்பை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலையான ரகுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விவேகானந்தனை கைது செய்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை ஊட்டி ஜூடிசியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சொத்து தகராறில் விவசாயியை, மகனே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story