திருக்கோவிலூர் சாலை விபத்தில் விவசாயி பலி; ஆட்டோ டிரைவர் படுகாயம்
திருக்கோவிலூரில் நடந்த சாலை விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டோ டிரைவர் பலத்த காயமடைந்தார்.
திருக்கோவிலூர்,
மோட்டார் சைக்கிள் மோதல்
திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 48). டிரைவரான இவர் சம்பவத்தன்று திருக்கோவிலூர்-கடலூர் சாலையில் வீரன் கோவில் அருகே தான் ஓட்டி வந்த ஆட்டோவை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழித்து விட்டு மீண்டும் ஆட்டோவை எடுக்க வந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சதீஷ் குமார் மீது மோதியது.
இந்த விபத்தில் சதீஷ்குமார் மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சி.மெய்யூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சக்திவேல் (38) என்பவரும் பலத்த காயமடைந்தனர்.
போலீசார் விசாரணை
விபத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து விபத்தில் சிக்கிய 2 பேரையும் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சக்திவேல் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்து போனார். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.