டிராக்டர் மோதி விவசாயி பலி
டிராக்டர் மோதி விவசாயி உயிரிழந்தார்.
மங்களமேடு:
விவசாயி
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள காருகுடி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல்(வயது 65). இவர் விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு காருகுடி மெயின் ரோட்டில் உள்ள தனது வயல்காட்டிற்கு சென்று விட்டு, பின்னர் மீண்டும் தனது வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஒரு நாய் குறுக்கே வந்ததால், சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி வடிவேல் கீழே விழுந்தார். அப்போது எதிரே அதே ஊரை சேர்ந்த துரைராஜின் மகன் சத்யா(26) ஓட்டி வந்த டிராக்டர், வடிவேல் மீது ஏறி இறங்கியது.
சாவு
இதில் வடிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் விரைந்து வந்து வடிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.