உழவர் உற்பத்தியாளர் குழுவை முழு நேரமும் செயல்படுத்திட வேண்டும்
விவசாயிகள் பயன்பெறும் வகையில் உழவர் உற்பத்தியாளர் குழுவை முழு நேரமும் செயல்படுத்திட வேண்டும் என்று கலெக்டர் (பொறுப்பு) பரமேஸ்வரி அறிவுரை கூறினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பரமேஸ்வரி தலைமை தாங்கி வேளாண்மைத்துறை மற்றும் அதன் ஒருங்கிணைந்த துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள், மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். வேளாண் உற்பத்தியாளர் குழு உறுப்பினரும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான நா.புகழேந்தி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், கூட்டுறவுத்துறைகள் மூலம் தொடக்க வேளாண் சங்கங்களில் விவசாயிகளுக்கு போதிய அளவு உரங்கள் இருப்பு வைக்கப்படுவதை அலுவலர்கள் அவ்வப்போது உறுதி செய்துகொள்ள வேண்டும். தோட்டக்கலைத்துறையின் மூலம் ஆடிப்பட்டத்தில் விவசாயிகள் மேற்கொள்ளும் காய்கறி பயிர் சாகுபடிகளுக்கு போதிய விதைகள், நாற்றுகள் வழங்க வேண்டும். விக்கிரவாண்டி பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பட்டுப்பூச்சி வளர்ப்பிற்கு தேவையான பயிற்சி வழங்குவதுடன், பட்டு வளர்ப்பிற்கு விவசாயிகளுக்கு பட்டு வளர்ப்புத்துறையின் மூலம் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் வேளாண் விற்பனைத்துறையின் மூலம் உழவர் உற்பத்தியாளர் குழு முழு நேரமும் செயல்பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்திட வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பரமேஸ்வரி அறிவுறுத்தினார்.
பயிற்சி கையேடு
அதனை தொடர்ந்து தோட்டக்கலைத்துறையினர் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கி, வேளாண் பயிற்சி குறித்த கையேட்டினை அவர் வெளியிட்டார்.
இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) சண்முகம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் காரல்மார்க்ஸ், வேளாண் துணை இயக்குனர் (திட்டம்) பெரியசாமி மற்றும் விவசாய உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் கலிவரதன், ராஜேந்திரன், ஏழுமலை, சமயமூர்த்தி, சுப்புராயலு, முத்துமல்லா, சம்பத்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.