விளைவித்த மக்காச்சோளத்தை காய வைக்க சென்ற போதுடிராக்டரில் மின்சாரம் பாய்ந்து விவசாயி பலிவாழப்பாடி அருகே பரிதாபம்
வாழப்பாடி
வாழப்பாடி அருகே விளைவித்த மக்காச்சோளத்தை காயவைக்க சென்ற போது டிராக்டரில் மின்சாரம் பாய்ந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
விவசாயி பலி
வாழப்பாடி அருகே சிங்கிபுரம் மேலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 43). விவசாயி. இவருக்கு அம்பிகா என்கிற மனைவியும், ராமஜெயம் (18) பால விக்னேஷ் (16) என 2 மகன்களும் உள்ளனர். வெங்கடேசன் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளத்தை காய வைப்பதற்காக தனது டிராக்டரில் சென்றார்.
டிராக்டரின் பின்பக்க பகுதியை தூக்கிய போது மேலே இருந்த உயர்மின் அழுத்த மின்கம்பி உரசியது. இதில் டிராக்டர் மீது மின்சாரம் பாய்ந்தது. டிராக்டரில் இருந்த வெங்கடேசன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
சோகம்
தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் விரைந்து வந்து வெங்கடேசன் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வெங்கடேசன் உடலை பார்த்து மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.
தனது தோட்டத்தில் விளைந்த மக்காச்சோளத்தை காய வைப்பதற்காக தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சென்றபோது மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தது வாழப்பாடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.