மொபட் மீது கார் மோதி விவசாயி பலி
பரமத்தி அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
பரமத்திவேலூர்
விவசாயி
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (68). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம், வாழவந்தி அருகே கீழ்சாத்தம்பூரில் உள்ள தனது குலதெய்வ கோவிலான செல்லாண்டியம்மன் கோவிலுக்கு செல்வதற்காக கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
இந்தநிலையில் பரமத்தி அருகே உள்ள காரைக்கால் பகுதியில் கோவிலுக்கு செல்வதற்காக கீழ் சாத்தம்பூர் பிரிவு சாலையை கடக்க முயன்று உள்ளார். அப்போது கரூரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மொபட்டில் சாலையை கடக்க முயன்ற சின்னசாமி மீது மோதி உள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட சின்னசாமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி போலீசார் சின்னுசாமியின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் சின்னுசாமி மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் கர்நாடக மாநிலம், பெங்களூரு எல்லனஹள்ளி, ராஜ் சிட்டியை சேர்ந்த நிரேஜ்குமார் மிஸ்ரா (43) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.