விவசாயி துப்பாக்கியால் சுட்டுக்கொலை
காரமடை அருகே ஆடுகள் திருடு போன தகராறில், விவசாயி நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய வாலிபரை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
காரமடை
காரமடை அருகே ஆடுகள் திருடு போன தகராறில், விவசாயி நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய வாலிபரை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ஆடுகள் வளர்த்தார்
கோவை மாவட்டம் காரமடை அருகே மேடூர் ரங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 58). விவசாயி. இவரது மனைவி மாணிக்கம் (55). இவர்களுக்கு பிரபு, சரவணன் என 2 மகன்கள் உள்ளனர். சின்னசாமி மாந்தரைக்காடு பகுதியில் உள்ள தோட்டத்தில் ஆட்டுபட்டி அமைத்து, ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் அவர் தனது ஆடுகளை அருகே உள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சின்னசாமி தனது ஆடுகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் மாலையில் ஆட்டுபட்டிக்கு சென்று பார்த்த போது, ஆடுகள் அங்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால், எங்கு தேடியும் ஆடுகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த சின்னசாமி, அதே பகுதியில் உறவினரான அய்யாசாமியின் வீட்டிற்கு சென்றார்.
தகராறு
அங்கு சின்னசாமி, அய்யாசாமி, குருந்தாசலம் ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது சின்னசாமி ஆடுகள் காணாமல் போனது குறித்து உறவினர்களிடம் கவலையுடன் பேசினார். அப்போது அவர்கள் மேடூர் செல்வா நகரை சேர்ந்த ரஞ்சித்குமார் (28) என்பவர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக கூறினர்.
அந்த சமயம் அங்கு ரஞ்சித்குமார் (28) வந்து உள்ளார். உடனே சின்னசாமி ரஞ்சித்குமாரிடம் நீ தானே என் ஆடுகளை திருடினாய்?, ஒழுங்காக எனது ஆடுகளை திருப்பி கொடுத்து விடு என கூறினார்.
இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தகராறு முற்றியதால், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. இதை பார்த்த அய்யாசாமி, குருந்தாசலம் ஆகியோர் இருவரையும் சமாதானப்படுத்தி ரஞ்சித்குமாரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கியால் சுட்டுக்கொலை
பின்னர் சின்னசாமி, அய்யாசாமி வீட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். இதற்கிடையே தன்னை தாக்கியதால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார், சின்னசாமியை கொல்ல முடிவு செய்தார். தொடர்ந்து இரவு 11 மணிக்கு ரஞ்சித்குமார் தனது வீட்டில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை ரஞ்சித்குமார் எடுத்து அய்யாசாமி வீட்டிற்கு பின்புறம் வந்தார். அப்போது அங்கு பேசி கொண்டிருந்த சின்னசாமியை துப்பாக்கியால் சுட்டார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் ரஞ்சித்குமார் வாழை தோட்டத்திற்குள் சென்று தப்பி ஓடினார்.
உடலில் குண்டுகள் பாய்ந்ததால் சின்னசாமி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த அய்யாசாமியும், குருந்தாசலமும் என்ன செய்வதென்று தெரியாமல் சத்தம் போட்டனர். இதை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் முனுசாமி, இப்ராகிம் ராவுத்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சின்னசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வாலிபர் கைது
இந்த சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரஞ்சித்குமாரை தேடி வந்தனர். இதற்கிடையே பொதுமக்கள் அவரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து ரஞ்சித்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சின்னசாமியின் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் வனப்பகுதியில் மேய்ந்து விட்டு இரவு தாமதமாக ஆட்டுபட்டிக்கு திரும்பி வந்தன. இதை அறியாமல் அவர் ஆடுகள் காணாமல் போனதாவும், ரஞ்சித்குமார் திருடி சென்றதாகவும் கூறியது தெரியவந்தது. அப்போது ஏற்பட்ட தகராறில் ரஞ்சித்குமார் துப்பாக்கியால் சுட்டதில், 11 குண்டுகள் பாய்ந்து சின்னசாமி இறந்து உள்ளார். தொடர்ந்து ரஞ்சித்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.