விவசாயி கத்தியால் குத்திக் கொலை

மேல்மலையனூர் அருகே குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கூறிய விவசாயியை கத்தியால் குத்திக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
மேல்மலையனூர்,
விவசாயி
செஞ்சி அடுத்த மேல்மலையனூர் அருகே உள்ள ஈயக்குணம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 65), விவசாயி. இவருக்கு ரங்கநாயகி (60) என்ற மனைவியும், சுப்பிரமணியன் (40), சக்திவேல் (33), மாரிமுத்து (28) ஆகிய 3 மகன்களும், மீனாட்சி என்ற மகளும் உள்ளனர்.
மீனாட்சிக்கு திருமணமாகி செஞ்சி அடுத்த தச்சம்பட்டு கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார். மகன்கள் சுப்பிரமணிக்கும், சக்திவேலுக்கும் திருமணம் ஆகிவிட்டது. பாலகிருஷ்ணன் தனது மனைவி, மகன்கள் குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார்.
கண்டிப்பு
மூத்த மகன் சுப்பிரமணியன் சரிவர விவசாயப்பணியில் ஈடுபடாமலும், வேலைக்கு செல்லாமலும் அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் சுப்பிரமணியன் நேற்று காலை குடிபோதையில் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதைபார்த்த பாலகிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல் சுற்றுவதோடு, அடிக்கடி ஏன் குடித்து விட்டு வருகிறாய்? எனவும், குடிப்பழக்கத்தை கைவிடுமாறும் கூறி சுப்பிரமணியனை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து கீழே போட்டு உடைத்துள்ளார்.
கத்தியால் குத்திக் கொலை
இதனை பாலகிருஷ்ணன் தட்டிக்கேட்டார். இதில் மேலும் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து பாலகிருஷ்ணனின் மார்பு, முதுகு பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி வளத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மகன் கைது
மேலும் இச்சம்பவம் குறித்து வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுப்பிரமணியனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுப்பிரமணியனுக்கு ராஜகுமாரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கூறி கண்டித்த தந்தையை மகனே கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.