ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கைகுறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கைகுறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Oct 2023 12:30 AM IST (Updated: 8 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:

விலை வீழ்ச்சியால் ஏற்படும் பாதிப்பை தடுக்க தக்காளியை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரூரில் நடந்த குறைதீர்க்கும் தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

நீரேற்று திட்டங்கள்

அரூர் கோட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. உதவி கலெக்டர் வில்சன் ராஜசேகர் தலைமை தாங்கினார். அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அரூர், மொரப்பூர் மற்றும் கடத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகளின் நலன் கருதி ஈச்சம்பாடி மற்றும் தாமலேரிப்பட்டி நீரேற்று திட்டங்களை விரைவாக நிறைவேற்ற வேண்டும். மயில்களின் பெருக்கத்தால் விவசாய நிலங்களில் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விலை வீழ்ச்சி

கிராமப்புற பகுதிகளில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்து தர விவசாயிகள் பதிவு துறையில் கட்டணம் செலுத்தி பதிவு செய்தாலும் கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பிரிவு செய்து தருவதில்லை. நிலத்தை அளந்து தரக்கோரி விண்ணப்பித்தவர்களின் பதிவு மூப்பு பட்டியலை தாலுகா அலுவலகங்களில் ஒட்டி வைக்க வேண்டும். தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

இந்த கூட்டத்தில் உதவி கலெக்டர் வில்சன் ராஜசேகர் பேசுகையில், நிலங்களை அளவீடு செய்வது தொடர்பாக முன்னுரிமை பட்டியலை ஒட்டுவது குறித்து வருவாய் துறை அலுவலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இந்த கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்துள்ள பல்வேறு கோரிக்கைகளை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

கூட்டத்தில் தாசில்தார்கள் பெருமாள், வள்ளி, உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் இளஞ்செழியன் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story